நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் அரசியல் ஆலோசகராக ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளராக பதவி வகித்தவர் ராம மோகன ராவ். இவர், தற்போது நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நியூஸ் மினிட் இணையதளத்திற்கு ராம மோகன ராவ் அளித்துள்ள பேட்டியில், “ பவன் கல்யாண் தனது கட்சியில் அரசியல் ஆலோசகராக சேருமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். அத்துடன் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வழிகாட்டுதல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். ஒரு அரசியல்வாதியின் இதயம் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு சொல்லிக்கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் தன்மைகளை பவன் கல்யாணிடமும் பார்க்கிறேன். அவர் திரைப்பட ஸ்டாராக இருந்தபோதிலும் தற்போது தான் அரசியலுக்குள் நுழைகிறார். ஸ்டார் என்றில்லாமல் மக்களுடன் மக்களாக பழகும் தன்மை கொண்டவர்” எனத் தெரிவித்துள்ளார்.
1985-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ராம மோகன ராவ் கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் தமிழக அரசில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து அவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.