மாநிலங்களவைத் தேர்தல் - கர்நாடகாவில் பாஜக; ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி
மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவும், ராஜஸ்தானில் காங்கிரஸும் வெற்றி வாகை சூடியுள்ளன.
மொத்தம் 57 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 15 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தமிழகம், உத்தரபிரதேசம், பிகார், ஓடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் மீதமுள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காலியாகவுள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகாவில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெஹர் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் நிறுத்தப்பட்டிருந்தனர். மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) வேட்பாளராக குபேரந்திர ரெட்டி களத்தில் இருந்தார்.
இந்த தேர்தலில் பாஜகவின் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் ஆகிய மூவருமே வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷும் வெற்றி பெற்றார். மஜத தோல்வி அடைந்தது. முன்னதாக, மஜத எம்எல்ஏ ஸ்ரீநிவாச கவுடா கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அங்கு எம்எல்ஏக்களை கட்சி மாறி வாக்களிக்க செய்ய குதிரைபேரம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து, ஆளும் காங்கிரஸும், எதிர்க்கட்சியான பாஜகவும் தங்கள் எம்எல்ஏக்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்தன. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரமோத் திவாரி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் வெற்றி வாகை சூடினர்.
பாஜக வேட்பாளர் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பாஜகவின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரான சுபாஷ் சந்திரா தோல்வியடைந்தார்.
முன்னதாக, பாஜக எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வாஹா, கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தது தெரியவந்ததால் அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து பாஜக நீக்கியது.