கர்நாடகா மாநிலங்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி (மஜத) எம்எல்ஏவான ஸ்ரீநிவாச கவுடா, கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ், மஜத, பாஜக ஆகிய கட்சிகள் சார்பில் 6 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று, மாநிலங்களவைக்கு தங்கள் உறுப்பினர்களை அனுப்பி விட வேண்டும் என்பதில் மூன்று கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன.
இதனிடையே, மற்ற கட்சி எம்எல்ஏக்களை கவர்வதில் ஒவ்வொரு கட்சியும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, தங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க காங்கிரஸ் முயற்சித்து வருவதாக மஜத தலைவர் ஹெச்.டி. குமாரசாமி நேற்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். எனினும், இதனை காங்கிரஸ் மறுத்தது.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்களிப்பு கர்நாடகா தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது. தேர்தல் முடிந்ததும் வெளியே வந்த மஜத எம்எல்ஏ ஸ்ரீநிவாச கவுடா, தான் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறினார். "எதற்காக கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தீர்கள்?" என நிருபர்கள் கேட்டதற்கு, தனக்கு காங்கிரஸ் மிகவும் பிடிக்கும் என ஸ்ரீநிவாச கவுடா பதிலளித்தார்.