சீனாவின் அத்துமீறலால் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.
இதனிடையே, லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் சீன உயர் அதிகாரியும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் மோதல் சம்பவம் குறித்து மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைத் தளபதிகள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சீனாவின் அத்துமீறலும் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததும், வேதனை அளிக்கிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் "வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் துணிச்சல், தியாகத்தை நாடு மறக்காது. எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும், தேவையான இடங்களில் கூடுதல் வீரர்களை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.