பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக அவர் இன்று காலாட்படை தின கொண்டாட்டத்துக்காக லடாக் பயணப்படுகிறார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்ரீநகர் மற்றும் லடாக் ஆகிய இடங்களுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். அவருடன் ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவும் பயணம் செய்ய உள்ளார். லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LOC) பகுதியில் பாதுகாப்புத் தயார்நிலை குறித்து நேரில் ஆய்வு செய்கிறார் ராஜ்நாத் சிங்.
முன்னதாக இன்று ஸ்ரீநகருக்குச் செல்லும் அவர், அங்கு விமானப்படை தளத்தில் 1947 போரின் வரலாற்று தருணங்களை குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கடந்த 1947ஆம் ஆண்டு, இதே தேதியில் (அக்டோபர் 27) இந்திய காலாட்படையினர் ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, எதிரிகளிடமிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். நமது காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், "காலாட்படை தினம்" கொண்டாடப்படுகிறது.
இந்த பயணத்தின் போது எல்லையில் குளிர்காலத்தில் ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதுகாப்பு நிலை குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நாளை கால்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் ராஜ்நாத் சிங்.
இதுபற்றி ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் அவர், “76 வது காலாட்படை தினத்தில், எங்கள் தைரியமான காலாட்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். இந்திய காலாட்படை மிகுந்த தைரியம் மற்றும் தொழில்முறையுடன் தொடர்புடையது. அவர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் சேவைக்கு தேசம் தலை வணங்குகிறது.
இன்று அக்டோபர் 27ஆம் தேதி, இந்திய ராணுவம் ஏற்பாடு செய்துள்ள ‘சௌர்ய திவாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் ஸ்ரீநகருக்குச் செல்கிறேன். ஒரு நாள் கழித்து, நான் லடாக்கிற்கு இரண்டு நாள் பயணமாக லே சென்றடைவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.