இந்திய - சீனா லடாக் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ராணுவ உயர் அதிகாரிகளுடன் அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய-சீன லடாக் எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மோதல் போக்கு உருவாகியிருக்கிறது. சீன ராணுவம் அத்துமீறியதாகவும், அதை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் பாதுகாப்புத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியது. ஆனால் இந்திய ராணுவம் அத்துமீறியதாக சீனா மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று லடாக் எல்லைப்பகுதியில் உள்ள ஏரியின் அருகே சீன ராணுவம் ஊடுருவ முயன்றதகாவும், அதை இந்திய ராணுவத்தினர் முறியடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மீண்டும் சீன ராணுவம் அப்பகுதிக்கு வரலாம் என்பதால், இந்திய ராணுவம் அங்கு படையை குவித்து வருகிறது. ராணுவ வீரர்களின் வருகையை கண்காணிப்பதில் அந்த இடம் முக்கிய பங்கு வகிப்பதால் மீண்டும் சீன ராணுவம் கட்டாயம் அங்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லடாக் எல்லையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.