இதுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டலா? - குற்றவாளியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்

இதுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டலா? - குற்றவாளியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
இதுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டலா? - குற்றவாளியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
Published on

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வெடிகுண்டு மிரட்டல்விடுத்ததற்கான காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. அதில் ''நாளை நான் விமான நிலையத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்க போகிறேன்'' என தெரிவிக்கப்பட்டது. அனுப்பியவரின்  தகவலாக சாய்ராம் என்பவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாய்ராமை தொடர்பு கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே வேளையில் விமான நிலையம் முழுவதும் சோதனையும் செய்யப்பட்டது. 

மிரட்டல் வந்த செல்போனின் ஐபி முகவரியை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சஷிகாந்த் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சஷிகாந்த், சாய்ராமின் நண்பர் என்பது தெரிய வந்தது. ஏன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என சஷிகாந்த் தெரிவித்த காரணம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. 

அவரின் வாக்குமூலத்தின் படி, ''நான் வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டுள்ள நிலையில் என் நண்பனான சாய்ராம் மேல்படிப்புக்காக கனடா செல்ல தயாரானான். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பயணத்தை தடுக்க நினைத்தேன்'' என தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாகவும் பல முறை கனடா தூதரகத்து சாய்ராம் குறித்து அவதூறான தகவல்களை மின்னஞ்சல் அனுப்பியதாகவும் சஷிகாந்த் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டலுக்காக சஷிகாந்தை போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் தன் நண்பனான சஷிகாந்தை சந்தித்த சாய்ராம் அவருக்கு ரூ.500 பணத்தை கொடுத்து போய்வருவதாக தெரிவித்தார். பின்னர் புதன்கிழமை தன் மேல்படிப்புக்காக அவர் கனடா கிளம்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com