இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அந்தப் பயணத்தில் பல்வேறு இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு அதன்பின்னர், உத்தரப்பிரதேசம் சென்றார். இப்பயணத்தின் 2-ஆவது நாளில் அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் வழிபட்ட ரஜினி பின்னர் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கோயிலின் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது ராமர் கோயிலின் மாதிரியை அக்கோயிலின் தலைமை பூஜாரி ஆச்சார்ய சத்யேந்திரதாஸ், ரஜினிக்கு
வழங்கினார். அயோத்தி வர வேண்டும் என்ற தனது நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளதாகவும் கோயில் கட்டப்பட்ட பின்னர் மீண்டும் வர திட்டமிட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.
இதனைத்தொடர்ந்து தற்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்திருந்தார். அப்போது, யோகி ஆதித்யநாத், அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யாவுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தையும் பார்த்து மகிழ்ந்தார் ரஜினி.
இந்நிலையில், நேற்று காலை சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினி சந்தித்தார். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், மைசூரில் பொறியியல் மாணவராக இருந்தபோதிலிருந்தே, தான் ரஜினி ரசிகன் என அகிலேஷ் கூறினார்.