ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்தில் உள்ள மந்தராயல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னே சிங். 26 வயதான இவர், தன் மனைவி விமல் பாயுடன் இணைந்து ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவற்றுக்கு தண்ணீர் தருவதற்காக சம்பல் ஆற்றில் இறங்கியுள்ளார் பன்னே சிங். அப்போது அவரது காலை முதலை ஒன்று கவ்வி, அவரை தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயன்றது. முதலையின் தாக்குதலால் பன்னே சிங் அலறியுள்ளார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு ஓடிச் சென்ற அவரது மனைவி, முதலையை குச்சியால் தாக்கியுள்ளார். ஆனால், முதலை பன்னே சிங்கின் காலை விடுவதாக இல்லை. தொடர்ந்து அவரை தண்ணீருக்குள் இழுக்கவே முயற்சி செய்தது. கிட்டத்தட்ட 15 நிமிடம் இந்த தாக்குதல் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் சமயோசிதமாக யோசித்த பன்னே சிங் மனைவியான விமல் பாய், முதலையின் கண்ணில் குச்சியால் குத்தினார். இதனால், முதலை தனது பிடியைவிட்டு பன்னே சிங்கின் காலை விடுவித்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பத்திரமாகக் கரைக்கு வந்தனர். கணவரை, சாதுர்யமாகக் காப்பாற்றிய விமல் பாயை எல்லோரும் பாராடி வருகின்றனர். அவருடைய இந்த செயல் குறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தன்னைக் காப்பாற்றிய மனைவிக்கு, கைகூப்பி நன்றி தெரிவித்துள்ளார், கணவர் பன்னே சிங். மேலும் அவர், “என் வாழ்வில் இதுவரை பெற்றிருக்கக்கூடிய சிறந்த பரிசு மனைவியின் இந்தச் செயல்தான்” எனப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் விமல் பாய், “என் கணவரை முதலை கடித்தபோது, என் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்கவில்லை. உலகில் என் கணவரோடு வாழ்வதே சிறந்த தருணம். அவரைக் காப்பாற்றுவதற்காக என் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை. அதற்காக, என் உயிரையும் கொடுத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்தச் செயலைப் பாராட்டி ட்விட்டர் வலைதளத்தில் பலரும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். அதில் பலரும், ”விமல் பாய் கெளரவிக்கப்பட வேண்டும். இந்தச் செயலைத் துணிச்சலாகச் செய்ததற்காக விமல் பாயை, மத்திய, மாநில அரசுகள் பாராட்டி கௌரவிக்க வேண்டும். குறைந்தபட்சம், பிரதமர் மோடியோ அல்லது முதல்வர் அசோக் கெலாட்டோ வீடியோ கால் மூலம் அந்தப் பெண்ணை அழைத்துப் பாராட்ட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளனர்.
மேலும் ஒருவர், ”முதலையின் வாயிலிருந்து தன் கணவனின் உயிரை மீட்டெடுத்த இன்றைய சாவித்திரி” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, ”நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்; ராஜஸ்தான் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் நாடு. அதை இன்றும் பாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.