ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனரான மேனகா தாமோர் என்பவர், அங்குள்ள சாதா பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் உள்ள மன்கர்தாம் என்ற பகுதியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மேனகா தாமோர், “பழங்குடியின குடும்பங்கள் அடிப்படையிலேயே குங்குமம் வைத்து கொள்வதில்லை, மாங்கல்யம் அணிவதில்லை. அவர்கள் எப்போதும் இந்துக்களிலிருந்து வேறுபட்டே இருந்திருக்கிறார்கள். நானும் அப்படித்தான். நான் விரதம்கூட இருப்பதில்லை. பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. கடவுள்களின் இருப்பிடமாக கல்வி நிலையங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். இங்கே எந்த திருவிழாக்களுக்கும் நடக்கக்கூடாது.
இங்குள்ள பழங்குடியின சமுதாய சிறுமிகளும், பெண்களுமாகிய நீங்கள் அனைவரும் கல்வியில் மட்டுமே இனி கவனம் செலுத்த வேண்டும். பண்டிதர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல” என்று பேசினார்.
இதற்கு அங்கிருந்த பழங்குடியின பெண்கள் சிலர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து இதுதொடர்பான காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், “அந்த ஆசிரியை ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்று அம்மாநில கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.