மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு ராஜஸ்தானின் சமூக நல வாரியம் அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநில சமூக நல வாரியத்தின் சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து சமூக நல வாரியத்தின் தலைவர் டாக்டர் அர்ச்சனா ஷர்மா கூறுகையில், "மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அந்த சிக்கலை தீர்க்கும் வகையில் மாதவிடாய் நாட்களின் போது பெண் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளை உருவாக்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வாரியம் முடிவு செய்துள்ளது'' என்றார்.
மேலும் அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கருத்தில்கொண்டு, சிறுவர், சிறுமிகளுக்கு 'குட் டச்' மற்றும் 'பேட் டச்' குறித்த விழிப்புணர்வு பயிலரங்கை அனைத்து பள்ளி, கல்லூரிகளில நடத்தவும் வாரியம் முடிவு செய்துள்ளது. அதோடு குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு குடும்ப ஆலோசனை மையங்களை அமைக்கவும் சமூக நல வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த மையம் உதவி தேவைப்படும் பெண்கள் அல்லது குடும்பங்களுக்கு தகுந்த ஆலோசனை, சட்ட உதவியை வழங்கும் என்று டாக்டர் அர்ச்சனா ஷர்மா கூறினார்.