ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஓட்டல் ஒன்றின் மொட்டை மாடியில் இருந்து, கடந்த சனிக்கிழமை இரவு மாடலிங் செய்துவரும் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற குங்குன் உபாத்யாய் என்ற அந்தப்பெண், ஒரு ஃபேஷன் மாடல் ஆவார். ஜோத்பூர் நகரைச் சேர்ந்த அவர், சனிக்கிழமை இரவு உதய்பூரில் இருந்து ஜோத்பூர் திரும்பியுள்ளார். பின்னர் அந்தப் பெண் ஜோத்பூரின் ரத்தனாடா பகுதியில் உள்ள லார்ட்ஸ் இன் என்ற ஒட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளளார். அப்போது, ஆறாவது மாடியில் இருந்து திடீரென குதித்ததாகக் கூறப்படுகிறது. மொட்டை மாடியில் இருந்து குதிக்கும் முன், மாடலான குங்குன் உபாத்யாய், தனது தந்தைக்கு ஃபோன் செய்துள்ளார். அவரிடம், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக அந்தப் பெண் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குங்குனின் தந்தை கணேஷ் உபாத்யாய், உடனடியாக காவல்துறைக்கு அழைத்து ஓட்டலில் சென்று பார்க்குமாறு தகவல் தெரிவித்துள்ளார்.
எனினும், போலீசார் ஓட்டலுக்கு சென்று சேருவதற்கு முன்பே, அந்தப் பெண் ஏற்கனவே ஓட்டலின் ஆறாவது மாடியில் இருந்து குதித்ததிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார், குங்குனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குங்குனை ஆய்வுசெய்த மருத்துவர்கள், அவருக்கு மார்பு மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்ததால், குங்குனுக்கு அதிகளவு ரத்தம் வெளியியேறியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவர்கள் குங்குனுக்கு ரத்தம் ஏற்றி வருகின்றனர். குங்குனின் தற்கொலை நடவடிக்கைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. குங்குன் தற்போது எதுவும் கூறும் சூழ்நிலையில் இல்லை என்றும், அவருக்கு சுயநினைவு திரும்பிய பின்னரே, இதற்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு இல்லை:
மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனைப் பெற, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு இலவசமாக ஆலோசனைப் பெறலாம்.