தூய்மை பணியாளர்கள் கழுவுநீர் தொட்டிக்குள் இறங்கி பணி செய்வதற்கு ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
கழுவுநீர் தொட்டிகளை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், “ ராஜஸ்தானில் தூய்மைப் பணியாளர்கள் யாரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி பணி செய்யவில்லை என்பதை அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களும் உறுதி செய்ய வேண்டு. இந்த பணியை இயந்திரங்களை கொண்டே செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டி மரணம் ஒருபோதும் நிகழக் கூடாது. தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பால் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளோம். மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் காவல்துறையினரின் முயற்சி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டில் ராஜஸ்தானின் அந்தஸ்தையும் மரியாதையையும் உயர்த்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், “மாநில அரசின் இந்த முடிவு மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாகும்”என பலரும் தெரிவிக்கின்றனர்.