“மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், பார்லிமெண்டில் சிவபெருமானின் படத்தை காட்டுகின்றனர்” என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி கட்சிக்கூட்டத்தில் ராகுல் காந்தியைப் பற்றி மறைமுகமாக பேசியுள்ளார்.
புதன்கிழமை தௌசாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ஜோஷி இதனைத் தெரிவித்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பேசிய காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சிவபெருமான் படத்தை காட்டி பாஜக மீது விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்நிலையில் கடந்த புதனன்று தௌசாவில் நடைப்பெற்ற பாஜக கட்சிக்கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி, “மாட்டிறைச்சி உண்பவர் மகாதேவின் படத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருகிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று மறைமுகமாக ராகுல்காந்தியை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ”இந்துக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை வன்முறையாளர்கள் என்று கூறினால் நாங்கள் அமைதியாக இருப்போமா? அல்லது இந்துமத நம்பிக்கையான ராமருக்கு கோவில் கட்டுவதை எதிர்த்தால் எங்களால் சும்மா இருக்கமுடியுமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.