கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் வி.கே.பால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 15ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் நாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் சூழலில் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
தொற்று பரவுவதை தடுக்க தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா, கொரோனா தடுப்பு பணிகளில் வேகம் குறைந்ததும் மக்கள் அதிகளவில் பொது இடங்களில் கூடியதுமே தொற்று எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று அவர் கூறினார்.
நாக்பூர், புனே, தானே, மும்பை, பெங்களூரு, எர்ணாகுளம் ஆகியவை தொற்று அதிகமாக உள்ள நகரங்கள் என சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் தொற்று பரவினாலும் கேரளாவில் தொற்று பரவல் ஒரு மாதத்தில் பாதியாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.