டெல்லியில் மழை தொடரும் : வானிலை ஆராய்ச்சி மையம்

டெல்லியில் மழை தொடரும் : வானிலை ஆராய்ச்சி மையம்
டெல்லியில் மழை தொடரும் : வானிலை ஆராய்ச்சி மையம்
Published on

தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக திங்கட்கிழமையும் மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பகல் நேர வெப்பநிலை கணிசமாக குறைந்து 22 டிகிரி செல்சியஸ் என்கிற அளவை அடைந்துள்ளது. இதனால் கோடை வெப்பம் முழுமையாக தணிந்துள்ளது. சென்ற வாரம் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி என்கிற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக டெல்லியில் பருவமழை காலத்திலும் மழைப்பொழிவு நாட்கணக்கில் நீடிக்காது. சிறிது நேரம் கனமழை பெய்தாலும், அதன் பிறகு மீண்டும் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் வெயில் அதிகரிக்கும். இந்த வழக்கத்துக்கு மாறாக, சென்ற வெள்ளிக்கிழமை இரவு முதல் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கடந்த 48 மணி நேரங்களில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்த நிலையில், இன்றும் அதே நிலை தொடரும் என்றும், மதியம் மற்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பொழியலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உத்ரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ள நிலையில், வட இந்தியாவில் மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து இன்று அலுவலகங்கள் மீண்டும் செயல்படும் நிலையில், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com