கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அசாம், மேகாலாயா, திரிபுரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேரும், நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேரை காணவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் 32 மாநிலங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
500 தற்காலிக முகாம்களில், ஒன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேகாலயாவிலும் கனமழை கொட்டி வரும் நிலையில், இரண்டு நாட்களில் 19 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். டங்கர் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த, 6 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாயை உதவித்தொகையாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 1940-ம் ஆண்டிற்கு பிறகு மாசின்ராம் மற்றும் சிரபுஞ்சியில் அதிகளவிலான கனமழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைவெள்ளத்தால் 40,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதில் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
திரிபுராவிலும் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தலைநகர் அகர்தலாவில் 6 மணி நேரத்தில் 145 மில்லி மீட்டர் கனமழை பெய்தது. கடந்த 60 ஆண்டுகளில் அகர்தலாவில் பதிவான 3-வது அதிகபட்ச மழை இது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பில்வாரா பகுதியில் சாலையில்
நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பாதியளவுக்கு நீரில் மூழ்கின. பல்வேறு சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மின்கம்பம் சாய்ந்து பாதிக்கப்பட்டது.
அதே போல் தகரத்தினால் அமைக்கப்பட்ட கூரை ஒன்று காரின் மீது விழுந்தது. டோங்க் பகுதியில் தெருவினில் தண்ணீர் ஆறு போல் ஓடியது. அப்போது நீரின் வேகத்தால் டிராக்டர் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. பின்னர் பெரும் போராட்டத்திற்கு பிறகு அதனை மீட்டனர்.