நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தெலங்கானாவில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்து ஓடுகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக அம்மாநிலத்தின் முலுகு, ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி, பத்ராத்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முலுகு மாவட்டத்தில் மட்டும் 649.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதற்கடுத்து, ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் 616.5 மி.மீ. பெய்துள்ளது. தெலுங்கானாவில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இந்தளவுக்கு மழை பெய்தது இதுவே முதல்முறை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை ஒட்டிய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் நேற்று 80-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் முத்யம்தரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் சிக்கிக் கொண்டனர். திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுக்க ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்ட பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர்.