கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிராயாக்ராஜ் நகரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ள கும்பமேளா நிகழ்ச்சிக்காக, கூடுதலாக 992 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும் 174 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும், பிரயாக்ராஜ் - அயாத்தியா, வாரணாசி - பிரயாக்ராஜ் மார்க்கத்தில் 140 சிறப்பு ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யவும் ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது.