ரயிலில் கஞ்சாவை கடத்திவந்து பெங்களூருவில் விற்பனை செய்துவந்த ரயில்வே ஊழியர் 3 பேரை கர்நாடகா போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ’’வடகிழக்கு எல்லை ரயில்வேயில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஏசி மற்றும் படுக்கையறை பெட்டிகளில் பணியில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட லாக்கரில் வைத்து அசாமிலிருந்து கஞ்சாவை பெங்களூருவுக்கு கடத்திவந்து விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு நகர மத்திய குற்றப்பிரிவு கிளைக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் குற்றவாளிகளை கூண்டோடு பிடிக்க ரகசிய திட்டமிட்டனர்.
அதன்படி, பையப்பனஹள்ளி காவல் நிலையம் மற்றும் எஸ்.எம்.டி.வி ரயில்வே நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் குற்றம்புரிந்த மூன்று ரயில்வே ஊழியர்களையும் கையும் களவுமாக பிடித்து கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.10 கிலோகிராம் கஞ்சா எண்ணெய் மற்றும் 6 கிலோகிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.