ரயில்வே மருத்துவமனைகளில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சிறப்பு தனி படுக்கைகள் வசதியுடன் மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும், கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் கூடுதலாக தனி படுக்கைகள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தனியார் மருத்துவமனைகளும் அரசுக்கு தனி படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சிகிச்சை பெறலாம் என இந்திய ரயில்வே ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிகிச்சை பெற வரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்களது அடையாள அட்டையை காண்பித்தால் மட்டும் போதும், ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை அனைத்து ரயில்வே வாரியங்களுக்கும் அனுப்ப அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் நலன் கருதியும், கொரோனா வைரஸுக்கு எதிரான மருத்துவமனைகளின் பற்றாக்குறை கருதியும் ரயில்வே ஆணையம் இத்தகைய உத்தரவை பிறபித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.