விசாகப்பட்டினத்தில் வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. காற்றில் கலந்து பரவிய விஷவாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்த பாதிப்புகளால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழுந்தனர். தகவலறிந்து ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ மனைகளுக்கு அனுப்பினர்.
தீயணைப்புத் துறையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 3 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்போரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரசாயன ஆலையில் நேரிட்ட விஷவாயு கசிவை கண்டறிந்து சீரமைக்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “வாயுக்கசிவு குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.