"அதுவரை தொடரமாட்டோம்!" காஷ்மீரில் ராகுலின் யாத்திரை திடீர் நிறுத்தம்!

"அதுவரை தொடரமாட்டோம்!" காஷ்மீரில் ராகுலின் யாத்திரை திடீர் நிறுத்தம்!
"அதுவரை தொடரமாட்டோம்!" காஷ்மீரில் ராகுலின் யாத்திரை திடீர் நிறுத்தம்!
Published on

பாரத் ஜோடோ யாத்திரைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ராகுலின் நடைப்பயணம் திடீர் நிறுத்தம்

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வரை யாத்திரையை தொடங்க மாட்டோம் எனவும் அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், “ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. பாதுகாப்பு இல்லாமல் ராகுல் காந்தி செல்வதை அனுமதிக்க முடியாது. அவர் நடக்க நினைத்தாலும் அதை அனுமதிக்க முடியாது" என தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இன்று பனிஹாலில் உள்ள காசிகுண்டில் பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்திய ஒற்றுமைப் பயணம் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி காரில் ஏறிச் சென்றார்.

பாரத் ஜோடோ யாத்ரா

காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கிலும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும், அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்ரா என்னும் இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கினார். 150 நாட்களில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கிலோ மீட்டர் பயணித்து காஷ்மீரில் இப்பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார். தமிழகத்தில் ஆரம்பித்த அவரது பயணம், பல மாநிலங்களைக் கடந்து, தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு நர்வால் பகுதியில் நடைபெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பால், ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறைக்குக் கடிதம்

குண்டுவெடிப்பு சம்பவத்தை கருத்தில் கொண்டு ராகுல் நடைப்பயணம் மேற்கொள்ளும் வழியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் என ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தி உள்ளனர். என்றாலும், அவருடைய பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் குற்றஞ்சாட்டியதை அடுத்து, காஷ்மீரில் இன்று அவரது பாரத் ஜோடோ யாத்ரா தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.சி.வேணுகோபால், ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

அதில், 'காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. டெல்லியில் நடைபெற்ற பயணத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தவறிவிட்டது. ராகுலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஹரியாணாவில் இருந்து தவறான நபர்கள் சிலர் நடைப்பயணத்தில் நுழைந்ததாக ஹரியாணா உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சோஹ்னா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இரு தலைவர்களும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 2013 நக்சல் தாக்குதலில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, வரவிருக்கும் நாள்களில் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் என தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

டெல்லி காவல் துறை பதிலடி

இதற்குப் பதிலளித்திருந்த டெல்லி காவல்துறை, “ராகுல் காந்தி பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது இல்லை. முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தபோதிலும்கூட அவர் விதிகளை மீறுகிறார். டெல்லியில் யாத்திரை நடந்தபோது பல போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் ராகுல் காந்தி பாதுகாப்பு வளையத்தை மீறிச் சென்றார்” என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com