மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் அடுக்கடுக்கான புகார்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். இதனால் அவையில் அனல் பறந்தது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட தவறான நிர்வாகத்தால் நாட்டின் வேலை வாய்ப்புக்கான முதுகெலும்பு உடைக்கப்பட்டு விட்டதாக ராகுல் காந்தி சாடினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், ராகுல்காந்திக்கும், பிரதமர் மோடிக்குமான விவாதமாகவே ஒரு கட்டத்தில் மாறிவிட்டது. ராகுல் காந்தி பேசும்போது பிரதமர் மோடி 2 முறை குறுக்கிட்டு எழுந்து நின்று பதிலளித்தார்.
மக்களவைக்குள் நுழையும்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னை பார்த்து லேசாக புன்முறுவல் பூக்கிறார் என்றும், ஆனால், பிரதமர் மோடி எப்போதும் இறுக்கமான முகத்துடனேயே தன்னை பார்க்கிறார் என்றும் ராகுல் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவரை சீரியசாகவே அணுக வேண்டும் என அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டிருந்ததை தான் பின்பற்றி வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
கடவுளுடன் நேரடியாக உரையாடக் கூடியவர் பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, கடவுள் கூறிதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்த பின் அதானிக்கும், அம்பானிக்கும் மட்டுமே அழைப்பு விடுத்ததாகவும் அத்வானிக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். வாரணாசி தொகுதியில் போட்டியிடாமல் ஃபைசாபாத் தொகுதியில் போட்டியிட்டிருந்தால் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போயிருப்பார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். இடையே குறுக்கிட்ட பிரதமர் மோடி சபைக்கு தேவையானதை மட்டுமே பேச வேண்டும் என வலியுறுத்தினார்.
குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டம் நடத்திய விவசாயிகளை மத்திய அரசு பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டி, அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்றும், நீட் தேர்வு என்பது வணிக ரீதியாகிவிட்டது என்றும், அது பற்றி விவாதிக்க மத்திய அரசு அனுமதி தருவதில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதனால் மக்களவையில் அனல் பறந்தது.