மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க வன்முறைக் காடானது மணிப்பூர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரம் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இன்னும் பலரும் அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, ஓராண்டைக் கடந்தும், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலை, மணிப்பூர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவின் தோல்விச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இன்று மீண்டும் (மூன்றாவது முறையாக) நேரில் சென்ற காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வன்முறையும் வெறுப்பும் எதற்கும் தீர்வாகாது. அன்பும் சகோதரத்துவமுமே தீர்வாக இருக்கும். மணிப்பூரில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிரதமர் மணிப்பூருக்கு வருகைதந்து மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என நாடு விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் வரவேண்டியது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன்.
இங்குவந்து மக்களின் குரலைக் கேட்டு அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒருங்கிணைந்த நிலங்களின் தொகுப்பான இந்தியாவில் மணிப்பூர் பெருமை மிகுந்த மாநிலம். மணிப்பூரில் பிரச்னை ஏற்படவில்லையென்றாலும் பிரதமர் இங்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு வந்து ஓரிரு நாள்கள் தங்கி மக்களின் வலிகளைக் கேட்க வேண்டும். இது மணிப்பூர் மக்களைச் சற்று ஆசுவாசப்படுத்தும். மணிப்பூர் சூழலை மேம்படுத்த, மீண்டும் அமைதியை நிலைநாட்ட எந்த உதவியையும் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. மணிப்பூருக்குத் தேவையான உதவிகளை செய்ய காங்கிரஸ் தயாராக இருப்பதாக அம்மாநில ஆளுநரிடம் குறிப்பிட்டோம்.
இங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எதுவும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பதையும் அவரிடம் கூறினோம். மேலும் பேசி, இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அது எங்களுடைய நோக்கமும் கிடையாது” எனத் தெரிவித்தார்.