“ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்தை யாராலும் தடுக்க முடியாது” - ராகுல்

“ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்தை யாராலும் தடுக்க முடியாது” - ராகுல்
“ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்தை யாராலும் தடுக்க முடியாது” - ராகுல்
Published on

காங்கிரஸ் அளிக்கும் வாக்குறுதிகள் எப்போதும் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திற்கு பயணம் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திருப்பதி மலையடிவார பகுதியான அலிபிரியிலிருந்து காலை 11.30 மணியளவில் மலையேறத் தொடங்கினார். 12 கிலோ மீட்டர் பாதையை சரியாக ஒரு மணி 50 நிமிடங்களில் விறுவிறுவென நடந்து ராகுல் காந்தி கோயில் இருக்கும் பகுதியை அடைந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் பயணித்த‌னர். 

ம‌லை ஏறி தேவஸ்தான விருந்தினர் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து‌க் கொண்ட பின் அவர் கோயிலுக்குச் சென்றார். கோயில் பிரதான நுழைவாயில் முன்பு ராகுலுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனத்திற்கு பின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்ப்பில் பட்டு வஸ்திரம், லட்டு பிரசாதம், நினைவு‌ப்பரிசு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வழங்கினார்.

திருப்பதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும், இதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் பேசினார். 

மேலும், ஆந்திராவுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற உறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, ‘மேக் இன் இந்தியா’,‘ஸ்டார்ட் அப் இந்தியா’ எனத் தொடர்ந்து மாற்றி வருவதாகவும் தெரிவித்தார். பெரும் முதலாளிகளின் கடனை ரத்து செய்யும் பிரதமர், விவசாயிகள் கடனை ரத்து செய்ய மறுப்பதாகவும் ராகுல் கூறினார். 

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தல்களின் போது விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும் என அளித்த வாக்குறுதி 2 நாட்களில் நிறைவேற்றபட்டதாக தெரிவித்த ராகுல், காங்கிரஸ் அளிக்கும் வாக்குறுதிகள் எப்போதும் நிறைவேற்றப்படும் என்றார். புல்வாமா தாக்குதலின் போது நமது வீரர்கள் இறந்தநிலையில், பிரதமர் மோடி, படப்பிடிப்புக்காக கேமரா முன்பு நின்றிருந்ததாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com