கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் ராகுல் காந்தி!
கர்நாடகாவில் மே 10ஆம் தேதி தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ஆம் தேதி, 224 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸோ ஆளும் பாஜகவை வீழ்த்தி, ஆட்சி அமைப்பதற்கான பாதைகளுக்கு முயன்று வருகிறது. குறிப்பாக, இந்த முறையும் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ், தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே (மார்ச் 29 ஆம் தேதி அறிவிப்பு) காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தைத் தொடங்கியது.
எம்.பி. பதவியைப் பறித்த 2019 பேச்சு
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார். இந்த முறையும் அவர், 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்பப் பெயர் குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில்தான் முதல் பிரசார கூட்டத்தைத் தொடங்க இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கர்நாடகாவில் பேசிய ராகுல் காந்தி, தொழிலதிபர்களான நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதைச் சுட்டிக்காட்டும் வகையில், ”எல்லா திருடர்களும் மோடி என்ற ஒரே குடும்பப் பெயரை ஏன் வைத்து உள்ளனர்” எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி
இதற்கு பா.ஜ.க., பிரதமர் மோடியை ராகுல் காந்தி மறைமுகமாக அவதூறு செய்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தது. தொடர்ந்து ராகுல் காந்தி மீது குஜராத் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எச்.எச்.வர்மா, ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சில நிமிடங்களுக்கு பிறகு அவருக்கு, 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்குகிறோம் என்றும், 30 தினங்களுக்குள் அவர் அப்பீல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் அதே இடத்தில் பேச்சைத் தொடங்கும் ராகுல்!
ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், டெல்லியில் அவர் வசித்த அரசு பங்களாவை காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தன்னுடைய எம்.பி. பதவியைக் காலி செய்யவைத்த கர்நாடக மாநில கோலாரிலேயே மீண்டும் அம்மாநில தேர்தலுக்காக முதல் பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார். ராகுல் மீண்டும் அங்கே பேச இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ம் ஆண்டு தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் ஓராண்டில் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு பாஜகவே காரணம் என காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.