ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசு விசாரணை நடத்த முடிவு செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 16 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்திய அரசு 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், பிரான்ஸ் அரசு விசாரணை நடத்த நீதிபதி ஒருவரை நியமித்தது. அவர் கடந்த 14 ஆம் தேதி தனது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசு விசாரணை நடத்தும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்னும் மௌனமாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், மோடி அரசு கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தாதது ஏன் எனக் கேட்டு, அதற்காக ஒரு கருத்து கணிப்பையும் நடத்தியுள்ளார்.
ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ள பாஜக, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ரஃபேல் தொடர்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட அனைத்து பரப்புரைகளும் வீணாகிவிட்டதாக தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில ரஃபேல் போர் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து இருப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் ஜூலை மூன்றாம் வாரம் தொடங்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அரசு மேற்கொள்ளும் விசாரணையின் ஒரு சிறு அசைவும் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.