தனக்கு மனைவியாக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என ராகுல் காந்தி மனம்திறந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி `இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் குமரி முதல் ஸ்ரீநகர் வரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பயணம் தற்போது டெல்லி வரை சென்றுள்ளது. இந்நிலையில் மும்பையில் அவர் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் ராகுல்காந்தி. அப்போது அவர் தன்னுடைய பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை தனது இரண்டாவது தாய் என்று கூறி, அவரே தன்னுடைய வாழ்வில் அன்பிற்குரியவர் அவர் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அப்போது நெறியாளர் அப்படியெனில் இந்திரா காந்தியை போன்ற ஒரு பெண் வந்தால் திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.. நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், என்னுடைய தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் குணங்களின் கலவையாக இருந்தால் நல்லது" என்றுள்ளார். இந்த நேர்காணலை கீழ்க்காணும் யூ-ட்யூபில் ராகுல் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் அவரை 'பப்பு' என அழைப்பது பற்றி விளக்கம் கொடுத்த ராகுல் காந்தி, "நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன். நீங்கள் என்ன சொல்ல விரும்பினாலும், அதுபற்றி கவலை இல்லை. நான் யாரையும் வெறுக்க மாட்டேன். உண்மையில் அவர்கள் என்னை அப்படி அழைக்க காரணம், அவர்களுக்குள் இருக்கும் பயம் தான். அவர்கள் வாழ்வில் உறவுச்சிக்கல்கள் இருக்கிறதுபோலும். பரவாயில்லை. இப்படியானவர்கள் விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். இன்னும்கூட வேறு பெயர் இருந்தால் அதையும் சொல்லுங்கள். நான் கவலைப்படமாட்டேன். நிம்மதியாகவே இருப்பேன்" என்றுள்ளார்.