இந்தியாவின் டிஎன்ஏ-வில் இயல்பிலேயே அன்பு அதிகம் இருப்பதாகவும், ஆனால் பாஜகவும், ஆர்எஸ்எஸும் வெறுப்புணர்வை பரப்புகின்றன என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். ராய்கர் அருகே உள்ள காந்தி சௌக்கில், மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திறந்த வாகனத்தில் யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி உடன் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவை தீபக் பைஜ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சரண் தாஸ் மஹந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
ராய்கரில் அருகே உள்ள கெவ்தபாடி சௌக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எதிர்கால தலைமுறைக்காக, வெறுப்பும், வன்முறையும் இல்லாத இந்தியாவை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. தற்போது இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் வன்முறையும் பரவி வருகிறது. இன்றைய தேதியில் சிலர் மொழியின் அடிப்படையில் மற்றவர்களை விரும்புவதில்லை; சிலர் மாநிலத்தின் அடிப்படையில் மற்றவர்களை விரும்புவதில்லை. இவையாவும் இந்த நாட்டை பலவீனப்படுத்தும்.
இந்தியாவில் பல்வேறு கலாசாரங்கள், நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழ்ந்தாலும், அவர்களிடையே அன்பும், அமைதியும் நிலவியது. பாஜகவும், ஆர்எஸ்எஸும் வெறுப்புணர்வையும், வன்முறையையும் பரப்பி வருகின்றனர். அதேநேரத்தில் இந்தியாவின் டி.என்.ஏ வில் அன்பு நிறைந்திருக்கிறது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் வன்முறையால் கொல்லப்பட்ட போதும், ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்த போதிலும் பிரதமர் மோடி அங்கு சென்று பார்வையிடவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.
நாட்டின் அனைத்து பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களும் அதானி வசம் சென்றது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக நான் இடைநீக்கப்பட்ட செய்யப்பட்டேன். அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். மக்களின் இதயத்தில் வாழும் எனக்கு, அரசு வழங்கும் வீடு தேவையில்லை” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.