ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பரப்புரையில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஜார்கண்ட் மாநிலம் பாக்மாரா, ஜாம்ஜெட்பூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வாக்கு சேகரித்தார்.
அப்போது, நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி, ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படும் அமைப்பு எனவும், நாட்டில் உள்ள மொத்த ஏழை மக்களில் 8% பழங்குடியினர், 15% தலித் மக்கள், 15% சிறுபான்மையினர் மற்றும் 50% பிற்படுத்தப்பட்டவர்கள் எனவும் ஆனால் அரசு வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் ராகுல்காந்தி சாடினார்.
நாட்டின் சமூகக் கட்டமைப்பை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சாதி, ம தம், மொழி அடிப்படையில் பாரதிய ஜனதா- ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவை பிளவுபடுத்திவருவதாகவும் ராகுல்காந்தி விமர்சித்தார்.
பாரதியஜனதா- ஆர்எஸ்எஸ்சுக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கொள்கை யுத்தம் நடப்பதாகவும், வெறுப்புக்கும், அன்புக்கும், வன்முறைக்கும், ஒற்றுமைக்கும் இடையே போர் நடப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.