இந்திய-சீன எல்லை பிரச்னை குறித்து பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் சீன விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் காணொலியில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி,
“இந்தியாவிற்குள் சீனப்படைகள் ஊடுருவலில்லை. ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்கப் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நமது ஆயுதப் படைகள் மேற்கொள்ளும்'' எனத் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''இந்தியாவுக்குள் யாரும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி சொல்கிறார். அப்படியென்றால் இந்திய நிலப்பரப்பை பிரதமர் மோடி சீனாவிற்கு ஒப்படைத்துவிட்டார்.
அப்படி ஒருவேளை அது சீனா நிலமாக இருக்கும்பட்சத்தில்
ஏன் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்?
எங்கே வைத்து கொல்லப்பட்டனர்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்