பண மோசடி வழக்கு - ராகுல் காந்தியிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தது என்ன?

பண மோசடி வழக்கு - ராகுல் காந்தியிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தது என்ன?
பண மோசடி வழக்கு - ராகுல் காந்தியிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தது என்ன?
Published on

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ஆஜரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக, ராகுல் காந்தியுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் பேரணியாக வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம், அசோசியேட்ஸ் ஜேர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஜூன் 2-ம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கும், ஜூன் 8-ம் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தான் வெளிநாட்டில் இருப்பதால் தேதியை மாற்றியமைக்குமாறு ராகுல் கோரிக்கை விடுத்தார். இதேபோல, கொரோனா சிகிச்சையில் இருப்பதால் தன்னாலும் குறிப்பிட்ட தேதியில் ஆஜராக முடியாது என சோனியாவும் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை ஜூன் 13-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதன் அடிப்படையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு தனது கட்சியினருடன் ராகுல் காந்தி நேற்று ஊர்வலமாக வந்தார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோரும் ராகுல் காந்தியுடன் வந்தனர். காலை 11.10 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நுழைந்த ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். 10 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையை அடுத்து, இரவு 11.30 மணிக்கே ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ப. சிதம்பரம், அதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையின் போது போலீஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதால் ப. சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com