மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்த
து. இடஒதுக்கீடு இல்லாமல் யுபிஎஸ்சி நியமனங்களை மேற்கொண்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்ஜேடி மூத்த தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், திமுக எம்பி வில்சன் ஆகியோர் யுபிஎஸ்சியின் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான நியமனங்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் (UPSC) பதிலாக ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்’ (RSS) மூலம் அரசு ஊழியர்களை நியமிப்பதன் மூலம், நரேந்திர மோடி அரசியலமைப்பை தாக்குகிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.
நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன். இதை சரி செய்வதற்கு பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள். இது UPSCக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகவும் உள்ளது.
ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள், முக்கிய அரசாங்கப் பதவிகளை ஆக்கிரமிப்பதன்மூலம் என்ன செய்வார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் SEBI. அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி இரண்டையும் புண்படுத்தும் இந்த தேச விரோத நடவடிக்கையை i-n-d-i-a கூட்டணி கடுமையாக எதிர்க்கும். இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர, ‘ஐஏஎஸ்’ பணியை தனியார்மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’ ” என அவர் தெரிவித்துள்ளார்.