”ராகுல்காந்தியை வயநாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது” - உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து தலைவர்கள் கருத்து!
மோடி குடும்பப் பெயர் தொடர்பான வழக்கில் குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக பரப்புரையின்போது மோடி என்ற குடும்பப் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பு
இந்நிலையில் இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம், “பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தண்டனை ஒருநாள் குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் தகுதி நீக்கம் தொடர்பான விதிகள் பொருந்தியிருக்காது. ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை ஏன் விதிக்கப்பட்டது என்பது பற்றி சூரத் நீதிமன்ற நீதிபதி விளக்கம் தர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார் என கூறப்படுகிறது. நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அவர் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுத முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதிய தலைமுறையிடம் கூறுகையில், “லோக்சபாவின் சபாநாயகர் ராகுல்காந்தியை மீண்டும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழும் அரசியல் சாசன சட்டத்தின் கீழும் அவரை லோக்சபா உறுப்பினராக நீக்கியது இனி செல்லாது. இதை சபாநாயகர் உணர்ந்து ராகுல் காந்தி மீண்டும் உறுப்பினராக தொடர ஆணை பிறப்பிப்பார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி
இது குறித்து புதிய தலைமுறையிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, “எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கடிதம் கொடுக்கப்படும். உச்சநீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பின் நகல் எங்களுக்கு கிடைக்க வேண்டும். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் மக்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதுவோம்” என்றார்
மு.க.ஸ்டாலின்:
ராகுல்காந்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ராகுல்காந்தியை வயநாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே:
ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயகம் வென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி:
நியாயமான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வாய்மையே வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
கனிமொழி:
திமுக எம்பி கனிமொழியும் அதேபோல் ராகுல் காந்தி புகைப்படத்தை பதிவிட்டு ’வாய்மையே வெல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமாவளவன்:
ராகுல் காந்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.