பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடிய தலைவர்கள், வாக்கு எண்ணிக்கை நாளன்று மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த கட்சித் தலைவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, கட்சி அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம், கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அல்ல என்றும், மோடி ஊடக கருத்துக்கணிப்பு என்றும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், சித்து மூஸே வாலாவின் பாடலைக் குறிப்பிட்டு இந்தியா கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.