காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை முன்னிறுத்தி அக்கட்சி மேற்கொள்ளும் ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது பாகம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை, மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை சுமார் 66 நாட்களுக்கு நடைபெற்று, மார்ச் 20ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இந்த யாத்திரையின் பயண நிகழ்ச்சி, தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
தனது முந்தைய யாத்திரையை போன்றே நடைப்பயணத்தின்போது, பொதுமக்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். எனினும், ஆரம்பம் முதலே ராகுல் காந்தியின் 2வது கட்ட ஒற்றுமை பயண யாத்திரை பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் மணிப்பூர் மாநில அரசு யாத்திரயைத் தொடங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு, அடுத்து ராகுலின் கார்மீது தாக்குதல், அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு என தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை ராகுல் காந்தி எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நாய் சாப்பிடாத பிஸ்கட்டை காங்கிரஸ் கட்சித் தொண்டருக்கு ராகுல் காந்தி வழங்கிவிட்டதாக வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டு, அவரை கடுமையாக விமர்சித்திருந்தது.
அந்த வீடியோவில், நாயுடன் கொஞ்சி விளையாடும் ராகுல் காந்தி, அதற்கு பிஸ்கட் கொடுக்க முயற்சிக்கிறார். பின்னர், அதனை மற்றொரு நபரிடம் கொடுக்கிறார். அந்த நபர் அந்த பிஸ்கட்டை கீழே வைக்கிறார். அதன்பிறகு, அந்த நபரின் கைகளை ராகுல் காந்தி பற்றிக் கொள்கிறார். அதாவது, ராகுல் காந்தி நாய்க்கு அளித்த பிஸ்கெட்டை அது சாப்பிடாத நிலையில், அதே பிஸ்கெட்டை ராகுல் காந்தி தொண்டருக்கு வழங்கியதாக பாஜக விமர்சித்திருந்தது.
இந்த வீடியோவை பகிர்ந்த பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா, "கடந்த சில நாட்களுக்கு முன்புதான், காங்கிரஸ் தலைவர் கார்கே, அக்கட்சி பூத் ஏஜென்ட்களை நாயுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இப்போது ராகுல், நாய் பிஸ்கட்டை தனது தொண்டருக்கு வழங்கி இருக்கிறார். கட்சித் தலைவரும் பட்டத்து இளவரசரும் கட்சித் தொண்டர்களை இப்படி நடத்தினால் அவர்கள் கட்சி சீக்கிரமாகவே மாயமாகிவிடும்” என விமர்சித்திருந்தார்.
அதுபோல் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். ”என்னை அவரது (ராகுல்) குடும்பத்தினரால் நாய் பிஸ்கட் சாப்பிட வைக்க முடியாது” என்று தெரிவித்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, "நான் ஒரு பெருமைக்குரிய அசாம் மாநிலத்தவர் மற்றும் இந்தியர். நான் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்யவே இவைதான் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிஸ்கட் தொடர்பான வீடியோவுக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், "நான் நாய்க்கு பிஸ்கட் தந்தபோது, அது கூட்டத்தைப் பார்த்து நடுங்கியது. இதனால் நான் உரிமையாளரிடம் பிஸ்கட்டைக் கொடுத்து நாய்க்குத் தரச் சொன்னேன். நான் பிஸ்கட் தந்த நபர்தான் நாயைக் கொண்டு வந்தவர். அங்கே இதுதான் நடந்தது. ஆனால், இந்தச் சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிதாக ஆக்குகிறார்கள் என தெரியவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.