மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானின் குடும்பத்தினர் பெற்ற வேளாண் கடன்களையும் காங்கிரஸ் அரசு முழுமையாக தள்ளுபடி செய்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பாக, ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி மத்தியப் பிரதேச முதலமைச்சராக கமல்நாத், தான் பொறுப்பேற்ற நாளில், விவசாய கடன் தள்ளுபடிகளுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் உஜ்ஜைனியில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார். முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானின் குடும்பத்தினர் பெற்ற வேளாண் கடன்கள் கூட தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக கூறிய ராகுல் காந்தி அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக காண்பித்தார். மேலும், வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை என மக்களிடம் சிவராஜ் சிங் சவுஹான் பொய்யுரைத்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.