“சரியாக விசாரிக்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது”-உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு!
மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும், மோடி என்ற குடும்ப பெயரை பயன்படுத்தியதாகவும் கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மார்ச் 23-ம் தேதி சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றம் இழைத்ததாக கூறி அவருக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது.
அந்த தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஜூலை 7-ம் தேதி அதனை தள்ளுபடி செய்த சூரத் நீதிமன்றம், அவர் மீதான கைது நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்தது.
இந்நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் ராகுல்காந்தி. அந்த மனுவில், “சரியான முறையில் வழக்கு விசாரிக்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டு சிறை தண்டனை என்பது அதீதமானது. அதை நிறுத்திவைக்க வேண்டும்” எனக்கூறப்பட்டுள்ளது.
வரும் திங்கள்கிழமை இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க, ராகுல்காந்தி தரப்பு கோரிக்கை வைக்கலாமென சொல்லப்படுகிறது. அப்படி வைத்தால், இந்த வழக்கு வரும் வாரமே விசாரிக்கப்படும். அதன்முடிவில் வரும் உத்தரவு, இடைக்கால உத்தரவாக இருந்தாலும்கூட மக்களவையில் அது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க வாய்ப்புள்ளது.