லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ராம்நாத்திடம் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராகுல்காந்தி தலைமையிலான குழு மனு அளித்தது. பிரியங்கா, குலாம் நபி ஆசாத், மல்லிஜார்ஜூன கார்கே, ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் ஜனாதிபதியை சந்தித்தனர். அப்போது லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ராம்நாத்திடம் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளதாகவும், மேலும், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியிருக்கிறார். ஜனாதிபதியை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல்காந்தி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.