தேர்தல் பத்திரம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியது. தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களின் அடிப்படை தகவல் அறியும் உரிமையை மீறுவதகாவும் தேர்தல் பத்திர விநியோகத்தை பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி, இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், மார்ச் 13ம் தேதிக்குள் அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க கோரி, பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 5) மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு 22,127 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மீட்கப்பட்ட பத்திரங்கள் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் படிப்படியாக மும்பையில் உள்ள தலைமையிடத்திற்கு அஞ்சல் வழியாக அனுப்பப்படுகின்றன” என தெரிவித்துள்ளது. மேலும், முழுவேலையையும் முடிக்க தற்போது உள்ள காலக்கெடு போதாது என தெரிவித்துள்ள வங்கி, முழுவிவரங்களையும் சமர்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் கோரியுள்ளது.
இந்நிலையில். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, “நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோடி தன்னால் இயன்றவரை முயல்கிறார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உண்மையை தெரிந்துகொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ள நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தலுக்கு முன் தெரியப்படுத்தக் கூடாது என எஸ்.பி.ஐ ஏன் விரும்புகிறது?
ஒரு க்ளிக்கில் பெறக்கூடிய தகவல்களை வழங்குவதற்கு ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது என்பது சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திரமான அமைப்பும் மோதானி குடும்பமாக மாறி தங்களது ஊழலை மறைக்க முயல்கின்றன. தேர்தலுக்கு முன் மோடியின் உண்மையான முகத்தை மறைக்க இதுவே கடைசி முயற்சி” என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “நானும் 20 ஆண்டுகள் ஒரு வங்கியில் பணியாற்றியிருக்கிறேன். இவ்வளவு பெரிய ஒரு வங்கி, இவ்வளவு கேவலலமான ஒரு சப்மிஷனை கொடுத்துள்ளதை இப்போதே பார்க்கிறேன்.
இந்த தகவலையெல்லாம் 2 நிமிடங்களில் அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். Basic Data Policy என்பது ஒரு வங்கியில் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு வங்கி நடத்த தேவையான அடிப்படை நிர்வாக தேவை, ரிசர்வ் வங்கியில் இருந்து அங்கீகாரம் பெற தேவையான தொழில்நுட்ப திறமை இல்லாதவர்கள்தான் இப்படி அவகாசம் தேவையென சொல்லலாம்.
உலகிலேயே பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடு என பெருமிதம் கொள்கிறார்கள்... இவ்வளவு பெரிய நாட்டில் உள்ள பெரிய வங்கியால்... ஒரு சாதாரண குறைவான தரவுகளை தர முடியவில்லை என்றால்... எனக்கு நடுங்குகிறது யோசிக்கவே. வங்கி சிஸ்டமே சரியில்லையோ என அச்சப்பட வைக்கிறது இதெல்லாம். ‘நாளைக்கு காலையில் வந்து கொடு’ என்று சொன்னால்கூட கொடுக்கும் அளவுக்கு கம்யூட்டர் சிஸ்டம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள், வங்கி தொழிலிலேயே இருக்க கூடாது” என்றார் காட்டமாக.