நாட்டில் தற்போது பயமான சூழல் உள்ளதாக பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் பத்திரிகையின் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். சில தொழிலதிபர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இதையும் படிக்கலாமே: பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்
இந்த விழாவில் பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,“தற்போது இந்தியாவில் மிகவும் பயமான சூழல் நிலவுகிறது. அரசை யாரும் விமர்சிக்க அனைவரும் பயப்படுகின்றனர். இதனை யாரும் வெளிப்படையாகவும் கூற முன்வரவில்லை. நான் இதனை வெளிப்படையாக கூறுகிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அரசில் யாரை வேண்டுமானாலும் எங்களால் விமர்சிக்க முடியும்.
மத்திய அரசு தற்போது நன்றாக தான் பணியாற்றி வருகிறது. எனினும் அந்த அரசை விமர்சிக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. என்னிடம் சில தொழிலதிபர்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு பயந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதேபோல அவர்கள் புதிய முதலீடுகளை தொடங்காமல் உள்ளனர். மத்திய அரசு வெளிப்படையாக செயல்பட்டு மற்றவர்கள் கூறும் விமர்சனத்தின் உண்மை தன்மையை அறிந்து அதனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.