காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மற்றொரு தேர்தல் வியூக நிபுணரான சுனில் கனுகோலுவை ராகுலும் பிரியங்காவும் நேற்று முன்தினம் சந்தித்து பேசியிருந்தனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையிலும் மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இச்சந்திப்பில் பேசப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்தாண்டு நடந்த பேரவை தேர்தல்களில் தமிழகத்தில் திமுகவுக்கும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் பிரஷாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் வகுத்து தந்திருந்தார். பின்னர் சரத் பவார், சந்திரசேகர் ராவ், நிதிஷ் குமார் உள்ளிட்டோரை சந்தித்தது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது. இந்நிலையில் அவர் ராகுலையும் பிரியங்காவையும் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.