“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்

“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்
“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்
Published on

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், இத்துறையில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாகவும் கூறி பிரசாந்த் பூஷண், எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் எமெ.எல்.ஷர்மா ஆஜராகி, “36 விமானங்களை வாங்குவதாக அறிவித்து விட்டு, பின்னர்தான் மத்திய அரசு பேரத்தில் ஈடுபட்டுள்ளது, இதனை அவர்களின் பிராமணப்பத்திரம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது, எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இத்தனை பெரிய பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பை ஒரு பிரதமர் எப்பபடி அறிவிக்கலாம்” என கேள்வி எழுப்பினார். 

மற்றொரு மனுதாரரான தண்டா “ உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்ததின் விலையை குறிப்பிட மறுக்கும் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் மட்டும் இரண்டு முறை கூறியுள்ளது” என்றார். அதற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றம் கேட்ட தகவல்கள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்ற தகவல் எனக்கே தெரியாது என்றார். 

மனுதாரர் தரப்பில் “ 2015 மார்ச் மாதம் வரை 126 விமானங்கள் வாங்குவதாக மத்திய அரசு சார்பில் கூறிவந்த நிலையில் அடுத்த 2 வாரங்களில் அனைத்தும் மாற்றப்பட்டு 36 விமானங்கள் வாங்க அறிவிப்பு வெளியானது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “இது தொழில்நுட்பம் சார்ந்த விவகாரம் என்பதால், இந்திய விமானப் படை அதிகாரிகள் யாரேனும் நீதிமன்றத்தில் உள்ளார்களா?” கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் “ பாதுகாப்பு துறை அதிகாரிகள் உங்கள் கேள்விகளுக்கு விளக்கம் கொடுப்பார்கள்” என்றார். கோபமடைந்த தலைமை நீதிபதி “ விமானப்படை அதிகாரிகளை வரச் சொல்லுங்கள், இது அவர்கள் தொடர்பான வழக்கில்லையா?” என்றார். 

இதனையடுத்து, விமானப்படை அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்ட தலைமை நீதிபதி, மதியம் 2 மணிக்கு விசாரணையை  ஒத்திவைத்தார். விமானப்படை மூத்த அதிகாரி ஒருவர் இன்னும் சற்று நேரத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com