ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக யஷ்வந்த் சிங், அருண் சோரி மற்றும் பிரசாந்த் பூஷண் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான இருதரப்பு வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இன்று மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மனுதாரர் தரப்பில் பிரசாந்த் பூஷண் ஆஜராகினர். ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுவது தேச பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று விசாரணையின் போது கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
அதேபோல், பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் எனக் கூறிவிட்டதாக ராகுல் காந்தி பரப்புரையின்போது பேசியது தொடர்பாக வழக்கின் தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ராகுல் காந்தி திரித்துக் கூறியதாக கூறி பாஜக எம்பி மீனாட்சி லேக்கி மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.