மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதற்காக, நடிகை கங்கனா ரணாவத்தை சிறையில் தள்ளவேண்டும் அல்லது மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என சிரோமணி அகாலிதளம் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை தனது ஷூவின் கீழ் கொசுக்களைப் போல நசுக்கியதாக இன்ஸ்டாகிராம் பதிவு வெளியிட்ட்தற்காக நடிகை கங்கனா ரனாவத் மீது அகாலி தள தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகாலி தளம் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, கங்கனா ரனாவத் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தானி இயக்கம் என்று தெரிவித்துள்ளதாக கூறினார்.
கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசாங்கத்தை வளைக்கக்கூடும். ஆனால் ஒரு பெண் பிரதமர் அவர்களை தங்களின் காலணியின் கீழ் கொசுக்களை போல நசுக்கினார். அவர் இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் தனது சொந்த உயிரைக் கொடுத்து நாட்டைச் சிதைக்க விடாமல் தடுத்தார். அவர் இறந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் இன்றும் அவரின் பெயரைக் கேட்டால் சிலிர்க்கிறார்கள், அவரைப் போன்ற ஒரு தலைவர் அவர்களுக்குத் தேவை" என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக அரசுக்கும், மூன்று வேளாண் சட்டங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருபவர் கங்கனா ரனாவத். பிரதமர் மோடி திடீரென மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற நிலையில் இத்தகைய பதிவுகளை இட்டு வருகிறார்.