பான் இந்தியா அளவில் வெற்றி அடைந்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ முதல் பாகத்தினைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஹைதராபாத்தில் அவர் இல்லாமலே துவங்கியுள்ளது.
சுகுமார் எழுத்து இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஃபகத் ஃபாசில், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, சுனில், ராவ் ரமேஷ், மைம் கோபி, அனசுயா பரத்வாஜ், அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு சுமார் 200 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரான இந்தப் படம், எதிர்பார்த்ததைவிட பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. குறிப்பாக இந்தியில் இந்தப் படம் வசூல் வேட்டையாடியது. மேலும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் செய்த மேனரிசங்கள், ரசிகர்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இடையே வைரலாகின. சமந்தா ஒரு பாடலுக்கு வந்துசென்றாலும், ரசிகர்களை பெருமளவுக்கு இந்தப் படம் ஈர்க்க அதுவே காரணமாக அமைந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா: தி ரூல்’ இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்தநிலையில், தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போரட்டத்தால், தாமதமான படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்த பூஜை நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் அல்லு அர்ஜூன், தனது மனைவியுடன் நியூயார்க் சென்றுள்ளார்.
அமெரிக்காவில் நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த அணிவகுப்பில், 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவராக, அல்லு அர்ஜுன் அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி நேற்று நடந்த அணிவகுப்பில் அல்லு அர்ஜுன் அவரது மனைவி சினேகா ரெட்டியுடன் கலந்து கொண்டு கொடிகளை அசைக்கும் வீடியோக்கள் சமூகவலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸிற்கு, ‘புஷ்பா’ படத்தில் வரும், புஷ்பானா பயருடா என்ற ஸ்டைலையும் அல்லு அர் ஜுன் கற்றுக்கொடுத்ததுடன், அவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.