அரசியல் சாசன தினம்: ஏன் இன்று கொண்டாடப்படுகிறது? - என்ன காரணம்; முழு விபரம்

அரசியல் சாசன தினம்: ஏன் இன்று கொண்டாடப்படுகிறது? - என்ன காரணம்; முழு விபரம்
அரசியல் சாசன தினம்: ஏன் இன்று கொண்டாடப்படுகிறது? - என்ன காரணம்; முழு விபரம்
Published on

அரசியல் அமைப்பு சட்ட தினம் இன்று கடைபிடிக்கப்படுகின்றது. இதற்கான நோக்கம் என்ன என்றும், இந்திய அரசியலமைப்பு சார்ந்த உச்சநீதிமன்றத்தின் மிக முக்கியமான வழக்கு ஒன்று குறித்தும், இன்றைய இந்தச் சிறப்பு தொகுப்பில் நாம் காண இருக்கின்றோம்.

1949 நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியல் சாசனம் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமாகும். இந்தத் தினத்தை தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், அரசியல் சாசன தினம் என ஒவ்வொரு ஆண்டும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். இந்திய அரசியல் சாசனம் என்பது இந்தியாவின் எல்லைகள், குடியுரிமை, மத்திய - மாநில - யூனியன் பிரதேச அரசுகளுக்கான அதிகாரங்கள், குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற அலுவலகங்கள், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள் நிதி பற்றிய விதிகள் தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் என ஒவ்வொரு செயல்பாடுகளையும், அங்குலம் அங்குலமாக மிகத் தெளிவாக வகுத்து வைத்துள்ள ஒரு கட்டளையாகும்.

இவை அனைத்தையும் போல ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கி இருக்கக்கூடிய உரிமைகள், என்ன கடமைகள் என்ன என தெள்ளத் தெளிவான வரையறைகளும் இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் தர அரசு மறுக்கக்கூடாது என பிரிவு 14-ன் படியும் சமயம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும், எந்த குடிமகன் இடத்திலும் அரசு பாகுபாடு செய்யக்கூடாது என பிரிவு 15-லும் என வகுத்ததோடு சுதந்திரமாக சிந்திப்பதற்கும், பிரிவு 19 உட்பிரிவு ஒன்றின் கீழ் பரந்துபட்ட சுதந்திரத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு நழுவி இருப்பது தான் நல்லுலகம் போற்றும் இந்திய அரசியல் சாசனம்.

முகவுரை:

நமது அரசியல் சாசனத்தின் முகப்பு ஆங்கிலத்தில் ப்ரியாம்பல் என்று சொல்வார்கள். இந்த ஒரே பத்தியில் இந்தியா எத்தகைய நாடு என்பதை தெள்ளத் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. “பாரத தேசத்தை மதச்சார்பற்ற சமதர்ம குடியரசாக அமைப்பதற்கு, இந்திய மக்களாகிய நாங்கள் உறுதிப்பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக பொருளாதார அரசியல் நீதி, எண்ண, எழுத எடுத்து செல்ல நம்பிக்கை வைக்க வழிபாடு செய்ய சுதந்திரம், தரத்திலும் தகுதியிலும் வாய்ப்பிலும் சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதற்கும் எங்களுடைய தனிமனிதரின் கௌரவம் மற்றும் தேசிய ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் உறுதியளிக்க தக்க சகோதரத்துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா எத்தகைய நாடு என்பதை உலகிற்கு பறைசாற்றுகிறது இந்த முகவுரை.

இந்த முகவுரை அரசியல் சாசனத்தின் ஒரு அங்கமா என நீண்ட நாட்களாக விவாதம் இருந்து வந்தநிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கேசவானந்த பாரதி என்ற மிகப் புகழ்பெற்ற ஒரு வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்கிரி தலைமையிலான 13 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

கேரளாவைச் சேர்ந்த கேசவானந்த பாரதி மடம் ஒன்றின் நிலங்களை நில சீர்திருத்தம் கொண்டு வந்து கேரளா அரசு கையகப்படுத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நேரடியாக நாடுவதற்கு வழிவகை செய்யும் அரசியல் சாசனப் பிரிவு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனு தாக்கல் செய்கிறார் கேசவானந்த பாரதி.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

அதில் மத வழிபாடு நடத்துவதற்கும் மத வழிபாட்டை காப்பதற்கும் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் தனக்கு வழங்கி இருக்கக்கூடிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என கூறியிருந்தார். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே அதிக நாட்கள், அதாவது 68 நாட்கள் விசாரணை நடத்தி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில் ஆறு நீதிபதிகள் அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக எந்தவித சட்டத்தை இயற்றவோ, நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என்றும், ஏழு நீதிபதிகள் அரசியல் சாசன சட்டத்தின் எந்தப் பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக சட்டத்தை இயற்றவோ அதிகாரம் இல்லை என தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் இயற்ற முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

மதச்சார்பற்ற சமதர்ம குடியரசு!

இதே தீர்ப்பில் தான் அரசியல் சாசனத்தின் முகவுரை அரசியல் சாசன அங்கம் அல்ல என இதற்கு முன்பாக பெருபாரி என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ததுடன், முகவுரையும் அரசியல் சாசனத்தின் அங்கம் தான் என்றும், ஆனால் அதனுடைய அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற இயலாது என்றும் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பினால் தான் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் பொழுது, அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட பொதுமக்களுக்கு வாய்ப்பு, இந்தியா என்ற மாபெரும் நாட்டின் மதச்சார்பற்ற சமதர்ம குடியரசாக தொடர்ந்து இருப்பதற்கும் வழிவகை செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com