'தோற்றத்தை வைத்து ஆளை எடைப்போடக் கூடாது’ என்பார்கள் முன்னோர்கள். இந்தப் பழமொழி சொல்வது என்னத் தெரியுமா? தோற்றத்தில் சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதருக்குப் பின்னால் நாம் சற்றும் எதிர்பார்க்காத பல சங்கதிகள் இருக்கும் என்பதுதான். அப்படி ஒரு தரமான சம்பவம் நிஜமாக இப்போது நடந்துள்ளது.
ஓடிசா மாநிலம் ஸ்ரீ பூரி ஜகந்நாதர் கோயில் பகுதியில் உட்கார்ந்து ஏராளமானவர்கள் பிச்சை எடுத்து பிழைப்பது வழக்கம். கோயிலுக்கு வரும் நபர்கள் தங்களின் மனநிறைவுக்காக யாசகம் கேட்பவர்களுக்கு தங்களால் முடிந்த தொகையை இட்டுச் செல்வார்கள். அப்படி பிச்சை எடுக்கும் நூற்றுக்கணக்கான நபர்களில் ஒருவராக இருந்தவர்தான் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவரது தோற்றத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் மனநிலை பிழன்றவர் என நினைத்துவிட்டு நகர்ந்து விடுவார்கள். அவரும் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என ஒரே இடத்தில் தினமும் உட்கார்ந்திருக்கும் மிஸ்ராவை அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் அறிவர்.
ஒருநாள் திடீர் என்று சைக்கிள் ரிக்ஷாக்காரர் ஒருவர், மிஸ்ரா உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். அதனை எதிர்பார்க்காத மிஸ்ரா அதனை நகர்த்தும் படி கேட்டுள்ளார். முதலில் வாய் வார்த்தையாக ஆரம்பித்த இந்த வாக்குவாதம் போகப்போக சண்டையாக மாறியுள்ளது. இறுதியில் இருவரும் அடிதடியில் இறங்கியுள்ளனர். ரிக்ஷா ஆசாமி செய்த தவறை யாரும் தட்டிக் கேட்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட தோற்றத்தில் இருந்த கிரிஜா சங்கர் மிஸ்ராவுக்கு யாரும் உதவ முன்வரவில்லை.
ஒரு கட்டத்திற்குமேல் இந்தச் சண்டை காவல்துறை வரைக்கும் எட்டி இருக்கிறது. அங்கே நடந்த விசாரணைக்குப் பின் இருவரையும் ஒரு புகார் கடிதம் எழுதித்தரச் சொல்லி உள்ளனர். அங்கே ஆரம்பித்தது அதிரடியான ஆட்டம்.
மிஸ்ரா, தனது புகார் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதுவும் தரமான கையெழுத்தில் எழுதியுள்ளார். அவரது ஆங்கில நடையை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் அரண்டுப் போய் உள்ளனர். பின் அவரிடம் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அவர்களுக்குக் காத்திருந்தது. தற்போது 51 வயது நிரம்பிய மிஸ்ரா, பிச்சைக்காரர் இல்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து ஒரு காவல்துறை அதிகாரி, “பிச்சைக்காரர் என்றுதான் முதலில் அறிந்தோம். ஆனால் அவர் ஒரு இன்ஜினியர். அவரது தந்தை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இதுவரை விசாரணையில் இதுதான் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது” எனக் கூறினார். ‘தி டெலிகிராஃப்’ வெளியிட்டுள்ள தகவலின்படி இவரது பெற்றோர்கள் தற்சமயம் உயிருடன் இல்லை என தெரிய வந்துள்ளது.
மிஸ்ரா, புவனேஷ்வரை சேர்ந்தவர். இவர் அங்கே பி.எஸ்.சி., பட்டப்படிப்பை முடித்துள்ளார். அடுத்து டிப்ளமோ இன்ஜினியர் முடித்துவிட்டு மும்பையில் ஒரு கம்பெனியில் வேலை செய்துள்ளார். அதன் பிறகு ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்திருக்கிறார். “ஹைதராபாத்தில் வேலையை உதறிவிட்டு ஏன் பூரிக்கு வந்து பிச்சை எடுக்கிறார் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை” என அந்தக் காவல் அதிகாரி தெரிவித்தார். சாதாரண சைக்கிள் ரிக்ஷா சண்டையில் ஆரம்பித்து மிஸ்ராவின் கதை, இன்று ஊடகங்கள் மூலம் இந்தியா முழுக்க பரவியுள்ளது.
ஏன் பிச்சை எடுக்க வந்தீர்கள் என கேட்டதற்கு மிஸ்ரா, “இது ஒரு தனிப்பட்ட விஷயம். பி.எஸ்.சி., படிப்பை முடித்த பின் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் நான் டிப்ளமோ படித்து முடித்தேன். அதன் பிறகு மில்டன் கம்பெனியில் வேலை பார்த்தேன். என்னுடன் பணிபுரிந்த மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை வந்ததால் என் வேலையை நான் விட்டுவிட்டேன். அதில் வெளியே சொல்ல முடியாத விஷயங்கள் பல உள்ளன. மனதில் அதற்கான காயங்கள் என்றென்றும் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
மிஸ்ராவின் சோகம் நிரம்பிய பின்புலத்தை அறிந்த காவல்துறையினர், அவரது கோரிக்கையை ஏற்று வழக்குப் பதியாமல் விட்டுவிட்டனர். ‘தி டெலிகிராஃப்’ தளத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி மிஸ்ராவிற்கு வீடு இல்லை. அவர் ஒரு கூரையின் அடியில்தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் தினமும் காலையில் ஆங்கில பத்திரிகைகளை தவறாமல் படித்து வருவதாக அந்தப்பகுதி வாசிகள் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகம் யாரிடமும் பேசுவதும் இல்லை பழகுவதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இப்போது புரிகிறதா? தோற்றத்தை வைத்து ஆளை எடைப்போடாதே என முன்னோர்கள் சொன்னதன் அர்த்தம்?