பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ் வாலா மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜீப் வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சித்து மூஸ் வாலா ஆபத்தான நிலையில் மான்சாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் சித்து மூஸ் வாலாவுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களின் பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
29 வயதான பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸில் சேர்ந்தார், 2022 பஞ்சாப் தேர்தலில் மான்சா மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சித்து மூஸ் வாலாவின் கொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ், “பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் வேட்பாளரும் திறமையான இசைக்கலைஞருமான சித்து மூஸ் வாலாவின் கொலை, காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த தீவிர துக்கத்தின் போது நாங்கள் ஒற்றுமையாகவும், உறுதியுடனும் நிற்கிறோம் ”என்று தெரிவித்துள்ளது